| ADDED : ஜன 08, 2025 06:28 AM
மதுரை: மதுரையில் 14.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட், தமிழகத்தின் 3வது பெரியது. பயணிகளின் வருகைக்கேற்ப இங்க சுத்தமோ, சுகாதாரமோ கொஞ்சமும் இல்லை. இத்தனைக்கும் ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற பஸ் ஸ்டாண்ட்.புறநகர் பஸ்கள் நிறுத்தப்படும் பிளாட்பாரங்களின் மேற்கூரையில் வெடிப்புகள், சிமென்ட் பெயர்ந்து காணப்படுகிறது. அவ்வப்போது பயணிகள் தலையில் சிமென்ட் துகள்களாக உதிர்ந்து விழுவதுடன், சிலசமயம் பயணிகளின் தலையை பதம் பார்த்தும் விடுகின்றன. பிளாட்பார டீக்கடை, பலகாரக்கடை உட்பட பலவும் எல்லை மீறி பொருட்களை பரப்பி இருப்பதால் பிளாட்பார்மில் எளிதாக நடந்து செல்ல வழியில்லை.தரைகள் ஆங்காங்கு பெயர்ந்து கிடக்கின்றன. குடிநீர் குழாய்கள் இல்லை. இருக்கும் தொட்டிகளிலும் தண்ணீர் ஏற்றுவதில்லை. அதன் அருகே செல்ல முடியாதளவு சுகாதார கேடாக உள்ளது. டவுன்பஸ்களை கண்டபடி நிறுத்துவதால் பயணிகள் இசை நாற்காலி போட்டியில் இடம்பிடிப்பது போல ஓடி ஓடிச்சென்று ஏறுகின்றனர். முதியோர், பெண்கள், சிறுவர்கள் என குடும்ப சகிதமாக வருவோர் படும்பாடு சொல்லி மாளாது. இவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்களின் இடையூறு வேறு. வழியில் வாகனத்தை நிறுத்தி, கையைப் பிடித்து இழுக்காத குறையாக பயணிகளை அழைக்கின்றனர்.இருசக்கர வாகனங்களுக்கென இடமிருந்தும், கண்ட இடங்களில் நிறுத்திச் செல்வோராலும் பயணிகள் அவதிப்படுகின்றனர். பெண்கள் தங்குவதற்கு ஏற்கனவே உள்ள அறையை விடுத்து, அருகிலேயே புதிய அறையை திறந்து மக்கள் வரியை வீணடித்துள்ளனர். இதற்கு பழைய அறையையே புதுப்பித்து இருந்திருக்கலாம்.பயணிகள் அமர ஏற்பாடு செய்திருந்த இருக்கைகள் பலவற்றை காணவில்லை. சில இருக்கைகள் பயணிகளை காயப்படுத்தும் வகையிலும், உடைகளை கிழித்துவிடும் அளவுக்கும் சேதமடைந்துள்ளன. மாநகராட்சி கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.