விதைக்கலாமா, வேண்டாமா... குழப்பத்தில் விவசாயிகள் நீர்வளத் துறை அலட்சியத்தால்
மேலுார்: மேலுார் நீர்வளத்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கால் தண்ணீர் திறந்து 7 நாட்களாகியும் இதுவரை தண்ணீர் வழங்காததால் 4 ஆயிரம் ஏக்கர் தரிசாகும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலுார் ஒரு போக பாசனத்திற்கு வைகையில் செப்.15 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் 12 வது பெரியாறு பிரதான கால்வாய் வழியாக குறிச்சிபட்டி வரை செல்கிறது.இதில் தனியாமங்கம் 11 வது கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரை குழிச்செவல்பட்டியில் இரண்டு மடைகள் மற்றும் ஷட்டர்கள் அமைத்து 11 ஏ கால்வாய் வழியாக இ.மலம்பட்டிக்கும், 10 வது கால்வாய் வழியாக கீழவளவுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் அமைத்துள்ளனர். ஆனால் இதுவரை 2 கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கவில்லை.விவசாயிகள் கூறியதாவது : குழிச்செவல்பட்டியில் 11 வது கால்வாய் வழியாக வரும் தண்ணீர் 3 கி.மீ., தொலைவில் உள்ள இ.மலம்பட்டிக்கும், கீழவளவுக்கு 10 வது கால்வாய் வழியாக செல்லும் கால்வாய் மணல் நிறைந்துள்ளது. தண்ணீர் திறந்து 7 நாட்களாகியும் இரண்டு மடைகளையும் நீர்வளத்துறையினர் திறக்காமல் அடைத்து வைத்துள்ளனர். இதனால் 4 ஆயிரம் ஏக்கர் தரிசாகும் நிலை ஏற்பட்டுள்ளது.உரிய நேரத்தில்தண்ணீர் திறந்தும் அதிகாரிகளின் அலட்சிய த்தால் விதை பாவுவதா, வேண்டாமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'மேலுார் ஒரு போகத்திற்கு குறைந்தளவு தண்ணீரே கிடைக்கிறது' என பொறுப்பற்று பதிலளிக்கின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் மேலுார் ஒரு போக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதால் உரிய தண்ணீரை உடனே வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், ''தண்ணீர் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.