திருப்பரங்குன்றம் மலை பிரச்னை குறித்து முதல்வர், துணை முதல்வர் வாய் திறக்காதது ஏன் * ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கேள்வி
திருப்பரங்குன்றம்:''திருப்பரங்குன்றம் மலை பிரச்னை குறித்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இதுவரை வாய் திறக்காதது ஏன்,'' என, திருப்பரங்குன்றத்தில் ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பினார்.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாலாபிஷேகம் முடித்து தரிசனம் செய்து, பசு மடத்தில் அவர் கோ பூஜை செய்தார்.பின் அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை ஒட்டுமொத்தமாக நம் பரம்பொருளின் வடிவம். அதனால் தான் கோயிலுக்குள் நந்தி மலையை பார்த்து உள்ளது. மலையில் அம்பாளுக்கு கோயில் உண்டு. இந்த மலையில் முதல் படை வீடாக முருகப்பெருமான் குடைவரை கோயில் போற்றப்படுகிறது. தொன்மை காலம் முதல் திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் விசாலாட்சிக்கு கோயில் உள்ளது.இடைக்காலத்தில் மதுரையில் சுல்தான் ஆட்சியில் மலையின் மீது ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில உடல்களை புதைத்தனர். இஸ்லாம் என்பது தர்கா வழிபாட்டை முழுமையாக நிராகரிக்கிறது. தர்கா வழிபாடு கூடாது. கயிறு கட்டக்கூடாது என அவர்கள் கூறுகின்றனர். திருப்பரங்குன்றத்தை பொருத்தவரை அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக உள்ளூர் ஜமாத்தார் இந்த விஷயத்தை ஆதரித்தது இல்லை. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாகதான் வெளியில் இருந்து வந்தவர்கள் தூண்டிவிட்டு தமிழகத்தில் ஒரு மத கலவர சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக செயல்படுகின்றனர். அராஜகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் இங்கு வந்து வேண்டும் என்றே இறைச்சி சாப்பிட்டு விட்டு மலை ஏறுவோம், மலை மேல் ஆடு, கோழி பலி கொடுக்கிறோம் என்கின்றனர். இவர்கள் மீது போலீசார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.தி.மு.க., கூட்டணியில் உள்ள நவாஸ் கனி எம்.பி., எம்.எல்.ஏ., ஆகியோர் திருப்பரங்குன்றம் வந்து,'வக்பு வாரியத்தில் உள்ளோம். இது வக்பு சொத்து, பார்வையிடவும், ஆய்வு செய்யவும் வந்தோம்,' என கூறியுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதியாமல் கைது செய்யாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டுள்ளார்களா.தீப தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதித்துள்ளது. ஆனால் அறநிலையத்துறை அங்கு தீபம் ஏற்றாமல் மோட்ச தீபம் ஏற்றக்கூடிய இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுகின்றனர். 40 ஆண்டுகளாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சி போராடி வருகிறோம். இது முருகனுக்கு சொந்தமான மலை என்ற அனைத்து ஆதாரங்களும் ஹிந்து அறநிலையத்துறை இடம் உள்ளது என்றார்.