மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு உயர்த்திய கூலி கிடைக்குமா... கிடைக்காதா : கவுன்சில் கூட்டம் நடக்காததால் ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல்
மதுரை:மதுரை மாநகராட்சியில் 3 மாதங்களாக மாமன்ற கூட்டம் நடக்காததால், துாய்மைப் பணியாளர்களுக்கு உயர்த்திய தினக் கூலி அறிவிப்பை அமல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் தினமும் குப்பை அகற்றும் ஒப்பந்தப் பணியை சென்னையை சேர்ந்த 'அவர் லேண்ட்' தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. இதில், ஒப்பந்தம் அடிப்படையில் 3234 துாய்மைப் பணியாளர்கள், 600 ஓட்டுநர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தினக் கூலியாக அந்த நிறுவனம் ரூ.590 வழங்குகிறது. தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட இப்பணியாளர்களின் போராட்டங்கள் காரணமாக தினக் கூலியை ரூ.624 ஆக உயர்த்தி நிர்ணயித்தது. இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கூலி உயர்வு சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் நடைமுறைக்கு வந்தும், மதுரையில் இன்னும் வரவில்லை. தினக்கூலி உயர்வுக்கு மாமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த ஒப்புதல் கிடைத்த பின்பே கூலி உயர்வு வழங்க முடியும் என தனியார் நிறுவனம் கறாராக உள்ளது. ஆனால் மதுரை மாநகராட்சியில் மேயர், மண்டல தலைவர்கள் பதவிகள் பல மாதங்களாக காலியாக கிடக்கின்றன. இதனால் மாமன்றக் கூட்டம் 3 மாதங்களாக நடக்கவில்லை. எனவே கூலி உயர்வுக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்கு வாய்ப்பில்லை ஒப்பந்த நிறுவன அலுவலர் கூறுகையில், கூலி உயர்வை அளிக்க தயாராக உள்ளோம். ஆனால் இன்னும் கவுன்சில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர் என்றார். மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கூலி உயர்வு குறித்து அரசு உத்தரவு உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரை, துணைமேயர் ஒப்புதலுடன் கூலி உயர்வை அறிவிக்கலாம். இதற்கான ஒப்புதலை பின்னர் நடக்கும் மாமன்றக் கூட்டத்தில் பெற்றுக்கொள்ளலாம். துணைமேயரால் பிரச்னை வராது என்றார். மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்கட்சி தலைவர் சோலைராஜா கூறுகையில், ''இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரையில் ஒரு மேயரை நியமிக்க முடியவில்லை. இதுதான் தி.மு.க.,வின் தற்போதைய நிலை. கூலி உயர்வு பிரச்னை முடிவுக்கு வந்தாலும் தேவைக்கு ஏற்ப புதிய நியமனங்கள், மக்கள் நலனுக்காக மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் மருந்துகள் கொள்முதல் செய்வது என பல சவால்களை அதிகாரிகள் சந்திக்கின்றனர். நகரமைப்பு பிரிவில், நகரில் பல இடங்களில் காலி மனைகளுக்கு ஒப்புதல் கிடைப்பது தொடர்பாக மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாயும் ரூ.பல லட்சம் பாதித்துள்ளது என்றார்.