உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / தருமபுரம் ஆதீனம் அறிவித்த உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

தருமபுரம் ஆதீனம் அறிவித்த உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் அறிவித்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில், தருமபுரம் ஆதீனம் சார்பில், இலவச மகப்பேறு மருத்துவமனை கட்டடம், 24வது குருமகா சன்னிதானம் சண்முகதேசிக சுவாமிகளால், 1943ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 25வது குருமகா சன்னிதானத்தால், 1951ல் திறந்து வைக்கப்பட்டது. மயிலாடுதுறை நகரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் அதிக அளவில் பயனடைந்து வந்தனர். பின்னர் இந்த மருத்துவமனை நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு செயல்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான மருத்துவமனைகள் திறக்கப்பட்டதால், தருமபுரம் ஆதீனத்தின் இலவச மருத்துவமனை மூடப்பட்டது. தற்போது அங்கு மருத்துவமனை செயல்பட்ட கட்டடம் மட்டுமே உள்ளது. அந்த மருத்துவமனை கட்டடத்தை நகராட்சி நிர்வாகம் இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை போட உள்ளதாக தகவல்கள் பரவின. இதையடுத்து, கட்டடத்தை இடித்தால், உயிர் போகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தமிழக முதல்வரின் அறிவுரைப்படி, 'கட்டடம் இடிக்கப்படாது' என்ற, நகராட்சி ஆணையரின் கடிதம் தருமபுரம் ஆதீனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதையடுத்து, உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப் படுவதாக தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை