டிராபிக் போலீசாரை தாக்கியவர் கைது- ஆர்.எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
சீர்காழியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டடி ராபிக் போலீசாரை தாக்கி, போதை கண்டறியும் கருவியை உடைத்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்பி உத்தரவின் பேரில் ஆர்.எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோவில்பத்து புறவழிச் சாலை சந்திப்பில் ஆர்.எஸ்.ஐ. வேல்முருகன் தலைமையில் டிராபிக் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு டூவீலரில் வந்த குழந்தைகள் நலத்துறை தற்காலிக பணியாளரான அகனி கலியமூர்த்தி மகன் மங்களதாசன்,35, என்பவரை டிராபிக் எஸ்.எஸ்.ஐ., செந்தில் என்பவர் நிறுத்தி குடிபோதையில் உள்ளாரா என சோதனை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மங்களதாசன் எஸ்.எஸ்.ஐ. செந்திலை தள்ளி விட்டதில் அவர் காயம் அடைந்ததுடன், போதை கண்டறியும் இயந்திரமும் சேதமடைந்தது. இதனை கண்ட டிராபிக் போலீசார் பிடித்து விசாரிக்க முயற்சி செய்த போது, பெண் போலீஸ் மற்றும் ஆர்.எஸ்.ஐ., வேல்முருகனை, மங்களதாசன் தாக்கியுள்ளார். இதனை அடுத்து போலீசார் அவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவின் பேரில், மங்களதாசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஆர்.எஸ்.ஐ. வேல்முருகன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசு தற்காலிக ஊழியர், போலீசாரை தாக்கிய சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.