உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சொந்த செலவில் கான்கிரீட் சாலை அமைப்புஆக்கிரமிப்பு என இடிக்க வந்ததால் ஆவேசம்

சொந்த செலவில் கான்கிரீட் சாலை அமைப்புஆக்கிரமிப்பு என இடிக்க வந்ததால் ஆவேசம்

பள்ளிப்பாளையம்:கால்வாயை ஆக்கிரமித்து சாலை அமைத்துள்ளதாக கூறி பொதுப்பணித்துறையினர் இடிக்க வந்ததால், ஆவேசமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப் பாளையம் அருகே, களியனுார் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்மன் நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செல்லும் வழித்தடம் மண் சாலையாக இருந்ததால், மழைக்காலத்தில் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதனால், சாலை அமைத்து தர வேண்டும் என, பள்ளிப்பாளையம் யூனியன் மற்றும் களியனுார் பஞ்சாயத்து நிர்வாகத்திடம், அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தனர். ஆனால், சாலை அமைத்து தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்களின் சொந்த செலவில் புதிதாக கான்கிரீட் சாலை அமைத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கால்வாயை ஆக்கிரமித்து கான்கிரீட் சாலை அமைத்துள்ளதாக கூறி, அதை அகற்ற, நேற்று காலை குமாரபாளையம் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொக்லைன் இயந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையறிந்து ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள், 100க்கும் மேற்பட்டோர், பொக்லைன் இயந்திரம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த பள்ளிப்பாளையம் போலீசார், வருவாய்த்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'சாலையை இடிக்க மாட்டோம்' என, உறுதி அளித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அம்மன் நகர் பகுதியில், நான்கு மீட்டர் அளவுக்கு கால்வாயை ஆக்கிரமித்து கான்கிரீட் சாலை அமைத்துள்ளனர். இதை அகற்ற சென்றபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றத்தை நிறுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி