உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்ஸ்டாவில் காதலிப்பது போல் நடித்து பள்ளி மாணவியிடம் நகை, லேப்டாப் பறிப்பு

இன்ஸ்டாவில் காதலிப்பது போல் நடித்து பள்ளி மாணவியிடம் நகை, லேப்டாப் பறிப்பு

சேலம், 'இன்ஸ்டாகிராம்' மூலம் பிளஸ் 2 மாணவி, ஒருவரை காதலித்தார். அவர் அறிவுறுத்தல்படி, சேலம் வந்த மாணவியிடம், நகைகள், லேப்டாப், மொபைல் போனை, அந்த வாலிபர், நுாதனமாக பறித்துச்சென்றார்.சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். அவருக்கு, 'இன்ஸ்டாகிராம்' மூலம், ஈரோட்டை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து மொபைல் போன் மூலம் பேசினர்.அப்போது அந்த நபர், 'என் பெயர் ராகுல். ஈரோட்டில் வசித்துக்கொண்டு கல்லுாரியில் படிக்கிறேன்' என தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரும் காதலித்த நிலையில், ராகுல், 'உன்னை பார்க்க வேண்டும்' என கூறியுள்ளார். கடந்த, 1ல் சென்னையில் இருந்து ரயில் மூலம் மாணவி புறப்பட்டார். அப்போது ராகுல், சேலத்தில் இருப்பதாகவும், அங்கேயே இறங்கும்படி அறிவுறுத்தினார். அவரும், இரவு, 9:00 மணிக்கு, சேலம் வந்து ராகுலை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து வெளியே புறப்படவிருந்த நிலையில், மாணவி கழிப்பறை செல்ல வேண்டும் என கூறினார்.அதற்கு ராகுல், 'இங்கு திருட்டுகள் அதிகம் நடக்கின்றன. யாராவது நகையை பறித்துவிடுவர். நகைகளை கழற்றி கொடுத்து விட்டு செல்' என கூறியுள்ளார். அதை நம்பிய மாணவி, அவர் அணிந்திருந்த, 2 வளையல், சங்கிலி உள்பட, 4 பவுன் நகைகள், அவரிடம் இருந்த லேப்டாப், மொபைல் போனை, ராகுலிடம் கொடுத்துச்சென்றார். சிறிது நேரத்துக்கு பின் வந்தபோது, ராகுலை காணவில்லை. அவரது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் தேடியும் காணாததால், அதிர்ச்சி அடைந்த மாணவி, ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பெற்றோரிடம், போன் மூலம் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து நேற்று முன்தினம் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை