எருமப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி600 காளை, 400 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு
எருமப்பட்டி, :எருமப்பட்டியில், இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதில், 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, எருமப்பட்டி, கைகாட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி, இன்று காலை நடக்கிறது. எம்.பி., ராஜேஸ்குமார் தலைமை வகிக்கிறார். அமைச்சர் மதிவேந்தன், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க கவுரவ தலைவர் செந்தில் தொண்டைமான் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்காக, பிரமாண்ட மேடை அமைக்கும் பணி, சில தினங்களுக்கு முன் துவங்கியது. நேற்று, வாடிவாசல், மாடுபிடி வீரர்களுக்கான தடுப்புகள், கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கான கேலரிகள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு, மைதானம் தயார் நிலையில் உள்ளது.இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக, 600 காளைகளுக்கு டேக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 400 மாடுபிடி வீரர்கள் பெயர் பதிவு செய்துள்ளனர். வாடி வாசல் முன்பும், மைதானத்திலும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயம் ஏற்படாமல் இருக்க, தென்னை நார்களை கொட்டி பரப்பி வைக்கப்பட்டுள்ளது.