மீன் பிடித்த மாணவி கிணற்றில் விழுந்து பலி
சேந்தமங்கலம், கொல்லிமலை யூனியன், நவக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 49; விவசாயி. இவரது மகள் உமா, 15. இவர், ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வில், மாணவி உமா, 279 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள கிணற்றில், மாணவி உமா மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென கால் தவறி, 20 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், கிணற்றில் மூழ்கிய மாணவியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.