உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் அருகே மத நல்லிணக்க விழா

ராசிபுரம் அருகே மத நல்லிணக்க விழா

ராசிபுரம் அருகே மத நல்லிணக்க விழாராசிபுரம்:ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் பகுதியில் நெசவாளர்கள், விசைத்தறியாளர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பிரசித்தி பெற்ற சிவசுப்ரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இந்து, -முஸ்லிம் சமுதாய மக்கள் ஒன்றுகூடி, சந்தனம் பூசும் மத நல்லிணக்க விழா கடந்த, 151 ஆண்டுகளாக நடந்து வருகிறது.இந்தாண்டு, இக்கோவிலின் தேர்த்திருவிழா வழக்கம்போல், கடந்த வாரம் நடந்தது. அதை தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், இந்து, முஸ்லிம்கள் கலந்துகொள்ளும் சந்தனம் பூசும் நல்லிணக்க விழாவும், நேற்று நடந்தது. முன்னதாக சிவசுப்பிரமணிய சுவாமி ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து, குருசாமிபாளையம் ஊர் பெரிய தனக்காரர் தியாகராஜன், ராசிபுரம் கிழக்கு தெரு பள்ளிவாசல் தலைவர் உசேன் ஆகியோர் தலைமையில், சந்தனம் பூசும் விழா நடந்தது. ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள மரத்தின் கீழ் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றாக இணைந்து, கொடிமரத்தில் வெள்ளை கொடியை ஏற்றி எல்லோரும் நலமாக இருக்க துவா ஓதி பிரார்த்தனை செய்தனர். தேங்காய் பழம், நாட்டு சர்க்கரை, பொட்டுக்கடலை பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு மக்களும் ஒருவருக்கு ஒருவர் பூமாலை மாற்றிக்கொண்டு, ஆரத்தழுவி சந்தனம் பூசிக்கொண்டதுடன், வீடுகள்தோறும் சென்று கதவுகளில் சந்தனம் பூசினர்.இந்த கிராமத்தில், கடந்த, 150 ஆண்டுகளுக்கு முன் கோவில் விழாவின்போது, கொள்ளை நோய் வந்தபோது, முஸ்லிம்கள் இப்பகுதி மக்களுக்காக வந்து துவா செய்து சேவையும் செய்துள்ளனர். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மல்லிணக்க விழா நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி