நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று, ஐந்து இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், போடிநாய்க்கன்பட்டியில் நடந்த முகாமில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.பி., ராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் உமா தலைமை வகித்தார்.அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில்,'' மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை, 8.74 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 11,604 மனுக்கள் பெறப்பட்டு, 10,500 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது,'' என்றார்.எம்.பி., ராஜேஸ்குமார் பேசுகையில்,'' மக்களுடன் முதல்வர் திட்டத்தில், மாநில அளவில் நாமக்கல் மாவட்டம், 100 சதவீதம் மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டு சிறந்த மாவட்டமாக திகழ்கிறது. மனுக்கள் மீது, 40 நாட்களில் தீர்வு வழங்கப்படும். சாதி சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு மாறுதல், மின் இணைப்பு பெயர் மாற்றம், கூட்டுறவு துறை சார்பில் கடனுதவி உள்ளிட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் தீர்வு வழங்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் அரசின் திட்டங்கள், சேவைகளை பெற்று பயன் பெறலாம்,'' என்றார். தொடர்ந்து மகளிர் திட்டம் சார்பில் எட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 76.17 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது.இதேபோல், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி எருமப்பட்டி, பவித்திரம், அணியார் ஊராட்சி ஆகிய இடங்களில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். எம்.எல்.ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அருளரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.