மோகனுார்: நாமக்கல் லோக்சபா தொகுதியில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மோகனுாரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.நாமக்கல் லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்படி, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மோகனுார் பஸ் ஸ்டாண்டில், 'எனது ஓட்டு; எனது உரிமை, என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என வண்ணக்கோலங்களால் வெளிப்படுத்தி இருந்தனர்.தொடர்ந்து, நடந்த விழிப்புணர்வு பேரணியை, மத்திய தேர்தல் கமிஷன் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர், போலீஸ் பார்வையாளர் உஷாராதா ஆகியோர் துவக்கி வைத்தனர். மோகனுார் பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணி, கடைவீதி, வளையப்பட்டி சாலை, பள்ளி சாலை என, முக்கிய வீதிகள் வழியாக சென்று துவங்கிய இடத்தில் முடிந்தது. பேரணியில், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியம் குறித்தும், ஓட்டுரிமை உள்ள அனைவரும் தவறாமல், ஓட்டுப்போட வேண்டும் என வலியுறுத்தியும், பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், கூடுதல் எஸ்.பி., தனராசு, தாசில்தார் மணிகண்டன், டவுன் பஞ்., செயல் அலுவலர் கலைராணி, இன்ஸ்பெக்டர் சவிதா, ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக, தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஓட்டுப்பதிவை குறிக்கும், 'ஒற்றை விரல்' சின்னத்துடன் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பிரசார வாகனங்களை, தேர்தல் பார்வையாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.