குமாரபாளையம்;குமாரபாளையம் அருகே சானார்பாளையத்தை சேர்ந்தவர் ரவி, 55, சலவை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை, 6:30 மணியளவில் சேலம்-கோவை புறவழிச்சாலை, தனியார் பள்ளி பின்புறம் மண் மேட்டில், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார். குமாரபாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரித்தனர்.இதில், ரவியின் மகள் வசந்தி அவரது கணவர் பூபதிக்கு, மகளிர் குழுவில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின் பூபதி வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பூபதியை பிரிந்து வசந்தி, தன் மூத்த சகோதரி மைதிலி, 33, உடன் வசித்து வந்தார். மைதிலி வீட்டிற்கு அடிக்கடி பூபதி சென்று வசந்தியை, அனுப்புமாறு கேட்டுள்ளார். இதற்கு ரவி எதிர்ப்பு தெரிவித்து திட்டியுள்ளார். இதனால் ரவிக்கும், பூபதிக்கும் விரோதம் ஏற்பட்டது.நேற்றுமுன்தினம் இரவு ரவி, பூபதி மற்றும் அவரது நண்பர்கள் குமாரபாளையம் புறவழிச்சாலை அருகே உள்ள தனியார் பள்ளி பின்புறம், மது குடித்துக்கொண்டு இருந்தனர். பூபதி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, ரவியை கொலை செய்துள்ளனர். தனது தந்தை ரவியை கொலை செய்த பூபதி, அவரது நண்பர்களை கைது செய்ய வேண்டும் என, குமாரபாளையம் போலீசில் மைதிலி புகார் செய்தார்.குமாரபாளையம் போலீசார் நேற்று காலை, 6:00 மணியளவில் காவேரி நகர் சோதனை சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை செய்ததில், ரவியை அவர்கள்தான் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பூபதி, 35, மாரியப்பன், 30, கிருஷ்ணன், 45, விக்னேஷ், 31, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.