உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாய்க்கு கொடுமை; முதல்வருக்கு பறந்த புகார் நாலுகால் பாய்ச்சலில் விசாரித்த போலீஸ்

நாய்க்கு கொடுமை; முதல்வருக்கு பறந்த புகார் நாலுகால் பாய்ச்சலில் விசாரித்த போலீஸ்

புதுச்சத்திரம், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே நவனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இரண்டு வயதான கன்னி ரக பெண் நாயை வளர்த்து வந்தார். தடியால் அடித்து நாயை கொடுமைப்படுத்துவதாக வீடியோ பரவியது. இதைப்பார்த்த சேலம், ஜங்ஷன் பகுதியை சேர்ந்த, பத்து ரூபாய் இயக்க மாநகர், மாவட்ட பொறுப்பாளர் சுபியான், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார்.இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, புதுச்சத்திரம் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.நவனி சென்ற போலீசார், வெங்கடேஷின் வளர்ப்பு நாயை, புதுச்சத்திரம் கால்நடை மருந்தகத்திற்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். இதில் நாய் நன்றாக இருப்பதாகவும், தடுப்பூசி முறையாக போட்டிருப்பதாகவும் டாக்டர் சான்றிதழ் அளித்தார்.இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'வெங்கடேஷ் வளர்த்த நாய், அவரது மகள் மற்றும் குடும்பத்தினரை கடிக்க சென்றுள்ளது. இதனால் கோபத்தில் தடியை கொண்டு மிரட்டியுள்ளர். ஆனால், நாயை அடித்து கொடுமை செய்வதாக புகார் சென்றுள்ளது' என்றனர். சமூக வலைதளங்களின் பெருக்கத்தால், இதுபோன்ற அனாவசிய நிகழ்வுகள் சமீபமாக பெரிதுபடுத்தப்பட்டு, பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்குவதும், பொறுப்பில் உள்ளோரை அலைக்கழிப்பு செய்வதும் அதிகரித்து வருகிறது. அசுர வேகத்தில் செல்லும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சி இன்னும் என்னென்னவெல்லாம் செய்யப் போகிறதோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !