| ADDED : மே 16, 2024 04:32 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில், பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி கடுமையாக மாசடைந்துள்ளது. இந்த குளத்தை துார்வார பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேந்தமங்கலத்தில், 1,000 ஆண்டு பழமையான சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், கோவில் முன் அமைந்துள்ளது. இந்த குளத்தில், சோமேஸ்வரர் கோவில் திருவிழாவின் போது, தெப்பம் விடும் நிகழ்ச்சி, 60 ஆண்டுக்கு முன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த விழாவை காண, நாமக்கல், காளப்பநாய்க்கன்பட்டி, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். பின், நாளடைவில் பழமையான இந்த குளத்தில் சேந்தமங்கலம் டவுன் பஞ்., மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் கழிவுநீர் கலந்தது.இதனால், கோவில் திருவிழாவின் போது தெப்பம் விடும் திருவிழா நிறுத்தப்பட்டது. மேலும், காந்திபுரம் ஏரியில் இருந்து, சோமேஸ்வரர் கோவில் தெப்ப குளத்திற்கு தண்ணீர் வரும் நீர்வழிப்பதை, பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு தடைபட்டுள்ளது. இதனால், தற்போது இந்த கோவில் குளம், கழிவுநீர் கலக்கும் இடமாக மாறி துர்நாற்றம் வீசுவதுடன், மாசடைந்துள்ளது. எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.