நாமக்கல்;'தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்கு, வயல்களை விதை சான்றளிப்புக்கு உட்படுத்த வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று துறை உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி கூறினார்.நாமக்கல் ஒன்றியம், திண்டமங்கலம் கிராமத்தில், பாசிப்பயறு ஆதார நிலை விதைப்பண்ணை மற்றும் நிலக்கடலை சான்று நிலை விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை, நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று துறை உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி மற்றும் நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயககுனர் சித்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.விவசாயி காளியண்ணன், தனது தோட்டத்தில் வம்பன்--4, பாசிப்பயறு ஆதார நிலை விதைப்பண்ணையும், சின்னுசாமி, கணேசன் ஆகியோர், தங்களது தோட்டத்தில், டி.எம்.வி.,--14 நிலக்கடலை சான்று நிலை விதைப்பண்ணைகளையும் அமைத்துள்ளனர். அவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த அதிகாரிகள், விதைப்பண்ணையின் முக்கியத்துவம் மற்றும் விதைப்பண்ணையில் கலவன் நீக்குதல், பயிர் விலகு துாரம் பராமரித்தல், பயிர் வளர்ச்சி பருவம், பூக்கும் தருணத்தில் உரிய நுண்ணுாட்டச்சத்து மேலாண் மற்றும் பூச்சி நோய் தாக்குதல் இன்றி பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினர். மேலும், விதை உற்பத்திக்கான வயல்களை விதைச்சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம், இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும் என, அறிவுறுத்தினர்.வட்டார உதவி விதை அலுவலர்கள் சங்கர், பொன்னுவேல், முன்னோடி விவசாயிகள், வேளாண் துறையினர் உள்பட பலர் பங்கேற்றனர்.