உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிறுபான்மையினருக்கு கடன் விண்ணப்பிக்க அழைப்பு

சிறுபான்மையினருக்கு கடன் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல், 'சிறுபான்மையினருக்கு தனிநபர், சிறுதொழில் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகின்றன. தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளில் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது அல்லது சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில், அறை எண், 28ல் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட கடன் திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் கடனுதவி பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !