நாமக்கல்:கலவரக்காரர்களை கட்டுப்படுத்த நவீன ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்து, போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.கலவரக்காரர்கள் மற்றும் ரவுடிகளை ஒடுக்க, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கட்டுப்படுத்த, தமிழகம் முழுதும் போலீசாருக்கு நவீன ரக துப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்து என்பது குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதையெடட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 27 போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், பயிற்சி எஸ்.ஐ.,க்கள் போலீசார், பெண் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் உள்ளிட்டவர்களில், 100க்கும் மேற்பட்டோருக்கு, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில், பல்வேறு வகையான நவீன ரக துப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.முதல் கட்டமாக, நாமக்கல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், புதுச்சத்திரம், நல்லிபாளையம், சேந்தமங்கலம், மோகனுார், எருமப்பட்டி, வாழவந்திநாடு போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசாருக்கு, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் மேற்பார்வையில், டி.எஸ்.பி.,க்கள் முருகேசன், இளங்கோவன் ஆகியோர் கலவரக்காரர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, அவர்களை அப்புறப்படுத்துவது என்பது குறித்து விளக்கினார்.மேலும், துப்பாக்கிகளின் வகைகள், என்னென்ன புல்லட்கள் உள்ளன. எந்தெந்த புகை குண்டுகளை வைத்து கும்பல்களை கலைப்பது என்பவை பற்றியும், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள், புல்லட், புகை குண்டுகளை வைத்து செயல் முறை விளக்கங்களை செய்து காண்பித்தனர்.ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் புதிதாக கண்ணீர் புகை குண்டுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து திருச்செங்கோடு, ப.வேலுார், ராசிபுரம் உட்கோட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் காவல்துறையினருக்கும் இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.