14ல் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
நாமக்கல்: 'மாவட்டத்தில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா, வரும், 14ல் துவங்கி ஒரு வாரம் நடக்கிறது' என, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில் வரும், 14ல் தொடங்கி, 20 வரை, 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கூட்டுறவு கொடியேற்றும் நிகழ்ச்சியும், மரம் நடும் விழாவும் நடைபெறும். கூட்டுறவின் சிறப்புகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படவுள்ளது.திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மாபெரும் விற்பனை மேளா, ரத்ததான முகாம் நடைபெறும். மேலும் பொதுமக்கள் நலனுக்காக பொது மருத்துவ முகாம், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி என பல்வேறு போட்டிகளும், உறுப்பினர் சந்திப்பு முகாமும் நடத்தப்படவுள்ளது.கால்நடை மருத்துவ முகாம், இளைஞர் ஈர்ப்பு முகாம், கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது. கைத்தறி கண்காட்சி நடைபெறும். கூட்டுறவு வார விழா நிகழ்ச்சிகளில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.