சேந்தமங்கலம் அருகே மாடு திருட்டு 3 பேர் கைது; ஆட்டோ பறிமுதல்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்த ராமநாதபுரம் புதுார் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், 68; விவசாயி. மேலும், பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது வயலில், மாடுகளை கட்டி மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். வீட்டிற்கு சென்றுவிட்டு, சில மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அங்கு கட்டி வைத்திருந்த மாடுகளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த விவசாயி பாண்டியன், அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். கிடைக்காததால், சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தார். எஸ்.ஐ., தமிழ் குமரன், ராமநாதபுரம் புதுார் பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவை ஆய்வு செய்தார். அதில், ஆட்டோவில் வைத்து பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், மாடுகளுடன் வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்துள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். கிடுக்கிப்பிடி விசாரணையில், முள்ளுக்குறிச்சியை சேர்ந்த பிரசாந்த், 27, கொல்லிமலை, மேக்கனிநாடு பகுதியை சேர்ந்த மாவீரன், 37, பிரபு, 42, என்பதும், மாடுகளை திருடியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ஆட்டோவையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.