நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் வாய்க்கால்மேட்டை சேர்ந்தவர் பிரகாஷ், 47; விவசாயி. இவர், தனது நிலத்தை அளந்து அத்து காண்பிக்க, பள்ளிப்பாளையம் சர்வேயர் கருப்பண்ணனிடம், கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத பிரகாஷ், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். அவர்கள் அளித்த ஆலோசனைப்படி, பவுடர் தடவிய, 2,000 ரூபாய் பணத்தை, 2009 அக்., 6ல், சர்வேயர் கருப்பண்ணனிடம், பிரகாஷ் வழங்கினார்.அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் களவுமாக, சர்வேயர் கருப்பண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, நேற்று தீர்ப்பளித்தார். அதில், லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக, 3 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம், லஞ்சம் வாங்கியதற்காக, 3 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.