உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 70 பிராண்ட் அம்பாசிடர்கள் நியமனம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 70 பிராண்ட் அம்பாசிடர்கள் நியமனம்

நாமகிரிப்பேட்டை, டிச. 21-நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 70 பிராண்ட் அம்பாசிடர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை நியாயமான விலையில் சந்தைப்படுத்தவும், உரிய விலை பெறவும் தமிழகம் முழுவதும், 21 விற்பனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவைகளின் கட்டுப்பாட்டில், 227 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. பா.ஜ., பொறுப்பேற்ற பிறகு, ஒழுங்குமுறை கூடங்கள் நவீனமயமாக தொடங்கியது. இ.நாம் திட்டம் மூலம் ஒரு பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து, ஆன்லைன் மூலம் இந்தியாவில் எந்த ஒரு இடத்தில் இருந்தும், வியாபாரிகள் வேளாண் பொருட்களை ஏல முறையில் வாங்கும் வசதியை கொண்டு வந்தது.தற்போது ஒழுங்குமுறை விற்பனை கூடத்தால், விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள், வசதிகள் குறித்து விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவும், வேளாண் பொருட்கள் குறித்து விற்பனை கூடத்திற்கு தெரிவிப்பதற்காக, ஒவ்வொரு ஊராட்சியிலும் இரு விவசாயிகள் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆலோசனைக்குழு கூட்டம், நேற்று நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்தது. வேளாண் அலுவலர் பூங்கொடி தலைமை வகித்தார். விற்பனை கூட கண்காணிப்பாளர் லோகாம்பாள் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், வெண்ணந்துார் ஒன்றியங்களை சேர்ந்த உழவர் நல ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். இதில், 70 பேர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின், பிராண்ட் அம்பாசிடராக தேர்வு செய்யப்பட்டனர். இ-நாம் திட்டம், பண்ணை வாயில் வர்த்தகம், பொருளீட்டு கடன், உழவர் நலத்திட்டம், வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம், ஏற்றுமதி ஆலோசனை, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஆகியவை குறித்து, அம்பாசிடர்களாக நியமிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கான அடையாள அட்டை தயார் செய்யும் பணி தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ