நாமக்கல் : 'தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் கண்காணிக்கப்படுவர்' என, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:திருச்செங்கோட்டில் கடந்த, 23 மாலை, 5:00 மணிக்கு, திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழா பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையை சேர்ந்த அருள்ஜோதி, முகிலன், அர்ஜூன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டூவீலரில் வந்த விஜய், தாமரைக்கண்ணன் ஆகியோரிடம், இந்த வழியாக செல்ல அனுமதியில்லை என தெரிவித்தனர். தொடர்ந்து, விஜய், தாமரைக்கண்ணன் ஆகியோர், பணியில் இருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த முகிலனை தாக்கி, பணி செய்யவிடாமல் தடுத்தனர்.இதுதொடர்பாக, திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்து, விஜய், தாமரைக்கண்ணன் இருவரையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை மிகைப்படுத்தி, சமூகவலை தளங்களில், எதிரிகள் கஞ்சா போதையில் தகராறு செய்ததாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். மேலும், கடந்த சில நாட்களில் இது மாதிரி தவறான தகவல்களை பரப்பிய சமூக வலைதளங்கள் மாவட்ட சைபர் கிரைம் மூலமாக கண்டறியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.