நிரம்பிய ஆண்டாபுரம் ஏரி
தென்மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது. அதன் காரணமாக, தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்திலும், கடந்த சில மாதங்களாக மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி அதன் கொள்ளளவை எட்டி வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான துாசூர் ஏரி நிரம்பி, அதன் உபரி நீர் வெளியேறி வருகிறது.இந்நிலையில், மோகனுார் தாலுகா, ஆண்டாபுரத்தில், 91 ஏக்கர் பரப்பளவில், ஏரி அமைந்துள்ளது. கொல்லிமலையில் இருந்து கொட்டும் மழைநீர், சேந்தமங்கலம், பழையபாளையம் ஏரி நிரம்பி, அங்கிருந்து உபரி நீர் ஆண்டாபுரம் ஏரிக்கு வருகிறது.இரண்டு ஆண்டுக்கு பின் ஏரி நிரம்பி உள்ளது. இது, அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த ஏரி மூலம், 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். ஆண்டாபுரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.