| ADDED : மே 03, 2024 07:21 AM
ப.வேலுார்: -ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், சில மாதங்களுக்கு முன் நடந்த மன்ற கூட்டத்தில் வார்டு பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கவும், சாக்கடை வசதி அமைக்கவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு டெண்டர் விடப்பட்டது. சாக்கடை, சாலை வசதி அமைக்க பணிகள் நடந்து வந்த நிலையில், ஒரு சில வார்டுகளில் பணிகள் நடக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டது என, நமது நாளிதழில் செய்து வெளியானது. இதையடுத்து ப.வேலுார், குப்பிச்சிபாளையம், 6 வது வார்டு பகுதிகளில் சாக்கடை வசதி அமைக்க பணி நடந்து வருகிறது. அவ்விடத்தை உதவி செயற் பொறியாளர் பழனி, நேற்று ஆய்வு மேற்கொண்டார். பணிகளை கால தாமதம் இல்லாமல் முடிக்கும் படியும், டெண்டர் விதிமுறைப்படி சாக்கடை வசதி அமைக்க வேண்டும் என, டெண்டர் எடுத்தவர்களிடம் கூறினார். ஆய்வின் போது, ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் வீரமணி, கவுன்சிலர் துரை செந்தில்குமார் உடனிருந்தனர்.