ஆற்றில் குதித்தவர் சடலமாக மீட்பு
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில், நேற்று முன்தினம் மாலை ஒருவர் ஆற்றில் குதித்துவிட்டார். தகவலறிந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் குதித்தவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை, பாப்பம்பாளையம் பகுதி ஆற்றில் சடலமாக மீட்டனர். பள்ளிப்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பள்ளிப்பாளையம் அருகே, டி.வி.எஸ்., மேடு பகுதியை சேர்ந்த முருகேசன், 47, என்பது தெரியவந்தது. அவர், சொசைட்டியில் தற்காலிகமாக வேலை செய்து வந்துள்ளார். போதிய வருமானம் இல்லாததால் சிரமப்பட்டு வந்துள்ளார்.இதனால் மனமுடைந்த முருகேசன், நேற்று முன்தினம், மனைவி கவிதாயிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'தனக்கு மனசு சரியில்லை; அதனால் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறேன்' என, தெரிவித்துவிட்டு, ஆற்றில் குதித்தது தெரியவந்தது. அவரை காப்பாற்ற, உறவினர்கள் வருவதற்குள், முருகேசன் ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.