அரச மரத்தடி மாணவர் வாசிப்பு வட்டம் சார்பில் புத்தகம் விற்பனை
நாமக்கல், அரச மரத்தடி மாணவர் வாசிப்பு வட்டம் சார்பில், ஒரு நாள் புத்தக கடை தொடக்க விழா, நாமக்கல் அடுத்த எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நடந்தது. தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.ஏழாம் வகுப்பு மாணவன் கிரிபாலா வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் மோகனசந்திரன் முன்னிலை வகித்தார். சங்க பொருளாளர் பாபு, புத்தக அங்காடியை தொடங்கி வைத்தார். தமிழன் அச்சகம் உரிமையாளர் செல்வகுமார் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் புத்தகத்தை முதுநிலை வேதியியல் ஆசிரியர் ரகிதா சுல்தானா பெற்றுக்கொண்டார்.'ஆதனின் பொம்மை' என்ற சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற சிந்து சமவெளி கீழடி நாகரிகங்கள், பண்பாட்டை, அதன் தொடர்பை வெளிப்படுத்தும் நாவலை, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை பொருளியல் ஆசிரியர் ஜெகதீசன், நுால் ஆய்வு செய்து பேசினார். மாணவர்கள் வாசிப்பு ஆர்வத்தை துாண்டக்கூடிய வகையில், எளிய புத்தகங்கள், நற்பண்புகளை வளர்க்கும் கதைகள் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.புத்தக வாசிப்பில் மாணவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது. அங்கு, 10,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததில், 7,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விற்றன. ஏற்பாடுகளை, முதுநிலை தமிழாசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார். உடற்கல்வி ஆசிரியர் செந்தில், ஆசிரியர்கள், மாணவ, மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.