முதல்வர் நாளை வருகை: நகரில் போக்குவரத்து மாற்றம்
நாமக்கல்: 'நாளை, முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, நாமக்கல் நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது' என, போலீஸ் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளை (அக்., 22), பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாமக்கல் வருகை தருகிறார். அதையடுத்து, நாளை காலை, 7:00 முதல், மாலை, 4:00 மணி வரை லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கும், காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை, அனைத்து வாகனங்களுக்கும், நாமக்கல் நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது. சேலம் பகுதியில் இருந்து நாமக்கல் வரும் வாகனங்கள் புதன்சந்தை, சேந்தமங்கலம், வேட்டாம்பாடி, அண்ணாநகர், கொசவம்பட்டி வழியாக நாமக்கல் வரவேண்டும். திருச்செங்கோட்டிலிருந்து வரும் வாகனங்கள், நல்லிபாளையம் நயாரா பங்க், பொய்யேரிக்கரை, உழவர் சந்தை, பார்க் ரோடு வழியாக வரவேண்டும்.அதேபோல், மோகனுார் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், அய்யப்பன் கோவில் வலதுபுறம் திரும்பி, ஸ்டேட் பேங்க் வழியாகவும், பரமத்தியிலிருந்து வரும் வாகனங்கள், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், இடது புறம் திரும்பி பொய்யேரிக்கரை, உழவர் சந்தை, பார்க் ரோடு வழியாகவும், திருச்சியிலிருந்து வரும் வாகனங்கள், வழக்கமான வழியிலும் நாமக்கல் நகருக்குள் வர வேண்டும். நாமக்கல் நகருக்கு வாகனங்களில் வரும் அனைவரும் இதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.நாமக்கல் நகரில், மெயின் ரோடு, திருச்சி சாலை, பரமத்தி சாலை, திருச்செங்கோடு சாலை, மோகனுார் சாலை போன்ற பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வைத்துள்ள உரிமையாளர்கள், தங்கள் கடைகளுக்கு முன், விளம்பர போர்டுகள் வைத்துள்ளதை அகற்றிக்கொள்ள வேண்டும்.மேலும், ஒரு பொறுப்பாளரை நியமித்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து வாகன உரிமையாளர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் நாளை (அக்., 22) ஒருநாள் போக்குவரத்துக்கு இடையூறின்றி காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.