இடியால் பற்றி எரிந்த தென்னை
நாமகிரிப்பேட்டை,நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில், நேற்று முன்தினம் மாலை பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. மாலை தொடங்கிய மழை, இரவு முழுவதும் நீடித்தது. முக்கியமாக, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, ஆயில்பட்டி, மங்களபுரம் பகுதியில் மழை அதிகம் இருந்தது. இந்நிலையில், மங்களபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் பலத்த சத்தத்துடன் இடி இறங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர்.மேலும், அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்த தென்னை மரத்தில் இறங்கிய இடியால், தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. வாழப்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தென்னை மரத்தில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.