ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிக்க கலெக்டர் அறிவுரை
மோகனுார், ''அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும்,'' என, கலெக்டர் துர்கா மூர்த்தி அறிவுரை வழங்கினார்.நாமக்கல் மாவட்டம், லத்துவாடி, பரமத்தியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மற்றும் மோகனுார் டவுன் பஞ்.,ல் வளர்ச்சி திட்டப்பணிகளை, கலெக்டர் துர்கா மூர்த்தி ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில், மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்து வருகிறது.இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், நகர்ப்புற பகுதிகளில், 13 அரசு துறைகளை சேர்ந்த, 43 சேவைகளும், ஊரக பகுதிகளில், 15 துறைகளை சேர்ந்த, 46 சேவைகளும் வழங்கும் வகையில், மனுக்கள் பெறப்பட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, நாமக்கல் மாநகராட்சி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரி, குமாரபாளையம் நகராட்சி, சீராப்பள்ளி டவுன் பஞ்., ஒடுவன்குறிச்சி, எலச்சிபாளையம் வட்டாரம், கோக்கலை கிராம பஞ்., சேவை மையம் கட்டடம், எருமப்பட்டி வட்டாரம், பொட்டிரெட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பரமத்தி வட்டாரம், எம்.சூரியம்பாளையம் சமுதாயகூடம் ஆகிய இடங்களில், இந்த முகாம் நடந்தது.நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரி, பரமத்தி வட்டாரம், எம்.சூரியம்பாளையம் சமுதாய கூடத்தில் நடந்த முகாமை, கலெக்டர் துர்கா மூர்த்தி பார்வையிட்டு, ஆய்வு செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். மேலும், உடனடி தீர்வாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, மோகனுார் டவுன் பஞ்.,ல் செயல்படும் அறிவு சார் மையம், வாரச்சந்தை, வாரச்சந்தை பகுதியில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட நீர்தேக்க தொட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் ஆரம்ப சுகாதார மையம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகள் இருப்பு, சிகிச்சை பெறும் நோயாளிகள் விபரம் ஆகியவற்றை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.மேலும், 'சுற்றுபுறத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும்' என, அறிவுறுத்தினார்.