விதிகளை பின்பற்றாத புதிய வீட்டுமனைகளின் அனுமதியை ரத்து செய்ய கவுன்சிலர் கோரிக்கை
நாமக்கல் ''விவசாய நிலங்களை, வீட்டுமனைகளாக மாற்ற அரசு விதிகளை பின்பற்றாததால், அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்,'' என, நாமக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.நாமக்கல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் கலாநிதி தலைமை வகித்தார். துணை மேயர் பூபதி, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:* சரவணன், தி.மு.க., கவுன்சிலர்: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி வருகின்றனர். இதற்கான அரசு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. குறிப்பாக, தெருவிளக்கு, சாலை வசதி, கால்வாய், பூங்கா, பொது இடம் ஒதுக்கீடு செய்து அனுமதி பெறவேண்டும். அவ்வாறு செய்வதாக கூறி அனுமதி பெற்றுவிடுகின்றனர். அதனால், இதுபோன்ற வீட்டுமனைகளுக்கு, மன்றத்தில் குழு அமைத்து ஆய்வு செய்த பின் அனுமதி வழங்க வேண்டும். மேலும், ஏற்கனவே வழங்கிய அனுமதியில், விதிகளை மீறிய வீட்டுமனைகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தார். * கலாநிதி, மேயர்: இதுகுறித்து அரசுக்கு தெரியப்படுத்தி, அவர்களின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.* இளம்பரிதி, தி.மு.க.,: வார்டுகளில் குடிநீர் சப்ளை செய்யும்போது, பல வீடுகளில் தொட்டி நிரம்பி, தண்ணீர் வெளியேறி வீணாகிறது. ஒவ்வொரு குடிநீர் இணைப்பிலும், 'நான் ரிட்டேர்ன் வால்வு' பொருத்தினால், தண்ணீர் வெளியேறி வீணாவது தவிர்க்கப்படும்.* சரவணன், தி.மு.க.,: வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்பதற்கு டெண்டர் மூலம் நியமனம் செய்யப்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது, 'கேஜி' சிஸ்டம் செயல்படுத்துவதால், சரியாக குப்பையை அள்ளுவதில்லை. அதனால், கேஜி சிஸ்டம் டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம் நீடித்தது.