எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், அகரம் கிராமத்திற்குட்பட்ட கொத்தம்பாளையம், சீத்தக்காடு பகுதிகளில், 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, திருமணிமுத்தாறு மேம்பாலத்திற்கு அடியில், 500 மீட்டர் தொலைவிற்கு காவிரி குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதேல்லாம், இரும்பு குழாய்கள் துருப்பிடித்து அடிக்கடி உடைந்து விடுகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், நேற்று, வழக்கம்போல் இரும்பு குழாய்கள் உடைந்தன. இதனை சரி செய்யாத தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து, மா.கம்யூ., கவுன்சிலர் சுரேஷ் தலைமையில், அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த குடிநீர் வடிகால் வாரிய உதவிசெயற்பொறியாளர் சேகர், பஞ்., தலைவர் லதா, வி.ஏ.ஓ., முருகேசன், போலீசார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், வரும், 11க்குள் உடைந்த குழாய்களை சரிசெய்து, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.