உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிறுபான்மையினர் தொழில் துவங்க கடனுதவி: மாவட்ட கலெக்டர் தகவல்

சிறுபான்மையினர் தொழில் துவங்க கடனுதவி: மாவட்ட கலெக்டர் தகவல்

நாமக்கல்: 'சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த மக்கள் சுய தொழில் துவங்க கடனுதவி அளிக்கப்படுகிறது' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்து, இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டர்கள், சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளி வந்தவர்கள், சிறு வணிகம் செய்ய நிதி உதவியாக அதிகபட்சம் ஒரு பயனாளிக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அதற்கு, அரசு ஒருசில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவராக இருந்தால், மாவட்ட அரசு டாக்டரிடம் பரிசோதித்து அதற்கான சான்று வழங்க வேண்டும். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக தாசில்தாரிடம் பொருள் இழப்பீடு சான்று பெறவேண்டும். சிறு குற்றங்கள் மற்றும் சிறை தண்டனை பெற்றிருந்தால், அவர்களது நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு ஆண்டு வருமானம், 36 ஆயிரம் ரூபாய், கிராமங்களைச் சேர்ந்தோருக்கு, 24 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். சிறைத் தண்டனை அனுபவித்து மறுவாழ்வு நிதி கோருபவராக இருந்தால், தடை செய்யப்பட்ட எந்த ஒரு அமைப்பின் உறுப்பினராகவோ, முனைப்பான பங்கேற்பாளராகவோ இல்லாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மீது எந்தவொரு குற்ற வழக்கும் நிலுவையில் இல்லாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர், சிறு தண்டனைக்காக சிறை சென்று வெளிவந்தவராகவும், தமிழகத்தை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். வீடு, உடைமைகளை இழந்தவர்கள் இழப்பின் அளவைப் குறிப்பிட்டு அதற்கான சான்று ஆவணங்களுடன், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலரை நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்