ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் :'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி, நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், எந்தவித நன்மையும் இல்லாத, 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மீட்டர் கொள்முதல் செய்வதால் மின்வாரியத்திற்கு கடன்சுமை அதிகரிக்கிறது. இந்த ஸ்மார்ட் மீட்டருக்கான வைப்பு தொகையை பயனீட்டாளர்களே செலுத்த வேண்டியது வரும். இதனால், விவசாய மின் இணைப்பு பெற்றவர்களும், 100 யூனிட் முதல், 500 யூனிட் வரை குறைந்தளவு மின்சாரத்தை பயன்படுத்தும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில், ஒப்பந்த நிறுவனமே மீட்டரை பொருத்த கட்டணம் வசூலிக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய பணியாளர்கள் பெரிதும் பாதிப்படைவர்.ஒன்றரை கோடி ஸ்மார்ட் மீட்டரை வாங்க ஒப்பந்தபுள்ளி இன்று கோரப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என, தெரிவித்தனர்.