அரசே நுழைவு கட்டணம் செலுத்தி ஊக்குவித்தும் பாதியாக குறைந்த கிளாட் தேர்வு விண்ணப்பம்
ராசிபுரம், நவ. 12-அரசுப்பள்ளி மாணவர்கள், 'கிளாட்' நுழைவுத்தேர்வு எழுத, அரசே நுழைவு கட்டணம் செலுத்தி ஊக்குவித்தபோதும், விண்ணப்ப பதிவு கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டு பாதியாக குறைந்துள்ளது ஏமாற்றமளிக்கிறது. உயர்கல்வி படிப்புகளான மத்திய சட்டப்பல்கலையில் சேர, 'கிளாட்', தொழில்நுட்ப கல்லுாரிக்கு, 'ஜே.இ.இ.,', டிசைன் கல்லுாரிக்கு, 'என்.ஐ.டி.,', மருத்துவ கல்கல்லுாரிக்கு, 'நீட்' தேர்வு, வேளாண் கல்லுாரிக்கு, 'ஐ.சி.ஏ.ஆர்.,' உள்ளிட்ட மத்திய அரசு கல்லுாரிகளில் சேர பல்வேறு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள், பிளஸ் 2 படித்து முடிக்கும்போதே பெரும்பாலும் நடந்து முடிகின்றன. அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வுகளில் கலந்துகொள்ள மாநில அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விபரம்:தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல், ஆலோசனை வழங்க நடப்பாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கண்ட போட்டி தேர்வுகள் தொடர்பான தகவல்களை, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு தெரியப்படுத்தி, தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான அறிவுறுத்தல்களை, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, பொறுப்பாசிரியர்களை நியமித்து, ஒவ்வொரு பள்ளியிலும், நுழைவுத்தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு நுழைவு கட்டணத்தை செலுத்துவதுடன், அவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் அளித்து வருகிறது. சட்ட கல்லுாரிகளுக்கான, 'கிளாட்' நுழைவுத்தேர்வு, வரும் டிச., 1ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பிக்கும் தேதி முடிந்தது. 'கிளாட்' தேர்வுக்கு நுழைவுக்கட்டணம், 3,500 ரூபாயிலிருந்து, 4,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணர்களுக்கு அரசே அதை செலுத்தியுள்ளது.கடந்தாண்டு, அரசு பள்ளி மாணவர்கள், 3,000க்கும் மேற்பட்டோர், 'கிளாட்' தேர்வு எழுதினர். ஆனால், ஒருவர் கூட மத்திய சட்ட பல்கலையில் சேரவில்லை. இந்தாண்டு அரசு பள்ளியில் இருந்து, 'கிளாட்' தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. அதாவது, தமிழகம் முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே, 'கிளாட்' தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர். இது ஏமாற்றம் அளிப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.