தேங்கிய மழைநீரால் விவசாயிகள் அவதி
ராசிபுரம், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பின் பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் தட்டாங்குட்டை ஏரி அமைந்துள்ளது. ஏரியை சுற்றி சந்திரசேகரபுரம், நேரு நகர், பெரியூர், காட்டுக்கொட்டாய் உள்ளிட்ட கிராம பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். கிராம மக்கள் தட்டாங்குட்டைஏரி வழியாக ராசிபுரம் பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில், ஐந்து ஆண்டுகளாக தட்டாங்குட்டை ஏரியை அடுத்துள்ள சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் வடியாமல் இன்றளவும் உள்ளது. இதனால் இந்த சாலையில் டூவீலரில் செல்ல முடிவதில்லை. 500 மீட்டர் தொலைவில் உள்ள ராசிபுரத்திற்கு செல்ல வேண்டும் என்றால், 6 கிலோ மீட்டர் துாரம் சுற்றிதான் செல்ல வேண்டும்.இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கிராம மக்கள் சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்ற அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீண்ட நாட்கள் தண்ணீர் இருப்பதால், தற்போது சாலையில் ஆகாயத்தாமரை பாசனம் என, சாலையே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டது. மாவட்ட நிர்வாகம் இங்குள்ள, இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.