உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; திருச்செங்கோட்டில் கலெக்டர் ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; திருச்செங்கோட்டில் கலெக்டர் ஆய்வு

நாமக்கல் : திருச்செங்கோடு பகுதியில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை நடந்தது. கலெக்டர் உமா நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிவரை கிராமங்களுக்கு சென்று மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து நேற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.திருச்செங்கோடு நகராட்சி பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளில் உணவு பொருட்களின் காலாவதியான தேதி மற்றும் தரம் குறித்தும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். பஸ் ஸ்டாண்டில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும், துாய்மை காவலர்களின் வருகை பதிவேடு, துாய்மை பணி மேற்கொள்ளும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார்.தொடர்ந்து, திருச்செங்கோடு தினசரி சந்தைக்கு சென்ற கலெக்டர், சந்தையில் உள்ள கடைகளின் வாடகை விபரம், கழிப்பிடம், குடிநீர் வசதி உள்ளிட்டவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, கடை விற்பனையாளரிடம் வாடகை செலுத்தும் ரசீதை ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை விவரங்களை கேட்டறிந்தார். குமரமங்கலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், பெரிய மணலி மற்றும் உஞ்சனை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என, உடன் வந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை