கோவிலில் அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்புத்துறை சான்று கட்டாயம்
நாமக்கல், டிச. 27-'நாமக்கல்லில் நடக்க உள்ள கோவில் திருவிழாக்களில் அன்னதானம் செய்ய விரும்புவோர், உணவு பாதுகாப்பு துறையின் சான்று பெற வேண்டும்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 30ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. வரும் ஜன., 10ல் வைகுண்ட ஏகாதசி அன்று, நாமக்கல் அரங்காதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. பிரசித்தி பெற்ற இந்த, இரண்டு கோவில் விழாக்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், தனியார் அமைப்புகள் பக்தர்களுக்காக அன்னதானம் வழங்குவது வழக்கம். அவ்வாறு, அன்னதானம் வழங்க விருப்பம் உள்ளவர்கள், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளின்படி, உணவு தயாரிப்பு பதிவு சான்று பெற்ற பின்னரே அன்னதானம் வழங்க வேண்டும். மேலும், அன்னதானம் வழங்குவதற்கு, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் பாக்கு மட்டை தட்டுகள், வாழை இலை ஆகிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.உணவு பாதுகாப்புத்துறையின் இணையதளம் மூலம் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், நாமக்கல் கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலரிடமும் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலக தொலைபேசி எண், -04286-299429 மற்றும் 9994928758 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.