223 பயனாளிக்கு இலவச பட்டாஎம்.பி., ராஜேஸ்குமார் வழங்கல்
நாமக்கல், சேந்தமங்கலம் அடுத்த கோணங்கிப்பட்டி கிராமத்தில் நடந்த விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 223 பயனாளிகளுக்கு, 2.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நத்தம் நிலவரி திட்ட வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.தொடர்ந்து எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில், கோணங்கிப்பட்டி கிராமத்தில், 223 பயனாளிகளுக்கு இலவச வீட்டுனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் உங்கள் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், 238 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முத்தமிழறிஞர் கலைஞரின் கனவான குடிசையில்லா தமிழகம் என்ற இலக்கை அடையும் வகையில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 6,500 பயனாளிகளுக்கு, தலா, 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.