நாமக்கல்: ''லோக்சபா தேர்தலில் வெற்றிபெற அரசு செயல்படுத்திய திட்டங்களை, வீடுகள் தோறும், தெருமுனை பிரசாரம், திண்ணை பிரசாரம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்,'' என, மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பேசினார்.கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பங்கேற்றார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:நாமக்கல் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை துவக்க, முதல்வர் ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரின் அனுமதியின் பேரில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துவக்குவதற்கான அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, அரசு செயல்படுத்திய திட்டங்களை, வீடுகள் தோறும் தெருமுனை பிரசாரம், திண்ணை பிரசாரம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.தொண்டர்கள், வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் என, அனைவரும், தாங்கள் தான் வேட்பாளர்கள் என, கருத்தில் கொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும். மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி ஓட்டு சேகரிக்க வேண்டும். இந்த லோக்சபா வெற்றி தான், தமிழக முதல்வருக்கு நாம் தெரிவிக்கின்ற நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.