பள்ளிப்பாளையத்தில் நாய் தொல்லை அதிகரிப்பு
பள்ளிப்பாளையம்,பள்ளிப்பாளையம் நகராட்சியில், சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.பள்ளிப்பாளையம் பகுதிகளில், கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையோரம், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கூறுகையில்,'நகராட்சி பகுதியில், 1,228 தெரு நாய்கள் உள்ளது என, கணக்கெடுக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக, 50 சதவீதம் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக, நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி நடந்து வருகிறது,' என்றனர்.