| ADDED : மே 04, 2024 07:46 AM
நாமக்கல் :'நாளை நடக்கவுள்ள, வணிகர் சங்க மாநில மாநாட்டிற்கு, கடைகளுக்கு விடுமுறை அளித்து, குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மே, 5ல் (நாளை) வணிகர் தினத்தன்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், 41வது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை, வளையங்குளத்தில் மதியம், 3:00 மணிக்கு நடக்கிறது. மாநாட்டிற்கு பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்கிறார். பேரமைப்பின் மண்டல தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். வைரமுத்து, மாநாட்டினை துவக்கி வைத்து பேசுகிறார். தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள் பேசுகின்றனர்.எனவே, மே, 5ல் கடைகளுக்கு முழு விடுமுறை அளித்து, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வணிகர்கள் குடும்பத்துடன் திரளாக மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.