கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசார் இணைந்து விசாரணை: சேலம் டி.ஐ.ஜி., தகவல்
கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசார்இணைந்து விசாரணை: சேலம் டி.ஐ.ஜி., தகவல்நாமக்கல், செப். 28-''ஏ.டி.எம்., கொள்ளையர்கள் குறித்து, கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசார் இணைந்து விசாரணை நடத்த உள்ளோம்,'' என, சேலம் டி.ஐ.ஜி., உமா கூறினார்.இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கேரள மாநிலம், திருச்சூர் பகுதிகளில், ஏ.டி.எம்., மையங்களில் கொள்ளையடித்துவிட்டு, வடமாநில கொள்ளையர்கள், நாமக்கல் மாவட்ட எல்லை வழியாக, தப்பிச் செல்வதாக, நேற்று தகவல் கிடைத்தது.வெப்படை, குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து லாரியை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது லாரியில் இருந்தவர்கள், போலீசாரை கற்களை கொண்டு தாக்கினர். சுதாரித்த போலீசார், டி.எஸ்.பி., இமயவர்மன் தலைமையில், கன்டெய்னர் லாரியை சுற்றி வளைத்து பிடித்தனர்.கன்டெய்னர் லாரிக்குள் ஆட்கள் பதுங்கியிருந்தது தெரிய வந்ததால், அந்த கன்டெய்னர் லாரியை ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டு பகுதியில் கொண்டு சென்று திறக்க முடிவு செய்தனர். அப்போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், லாரியில் இருந்தவர்கள் பணப்பையுடன் தப்பி ஓட முயன்றனர். மேலும், போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த, ஏ.டி.எம்., கொள்ளையன் ஜூமான், 40, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். இந்த தாக்குதலில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். அந்த கன்டெய்னர் லாரிக்குள் இருந்த ஒரு சொகுசு காரில், 5 பேர் பதுங்கி இருந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, வெப்படை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த விசாரணையில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த, ஏ.டி.எம்., கொள்ளையர்கள், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பல, ஏ.டி.எம்., மையங்களில் கொள்ளை அடித்து விட்டு, தங்களது கூட்டாளிகளான கன்டெய்னர் லாரி டிரைவரிடம் சொகுசு காரை உள்ளே ஏற்றி வைத்து, அதில், பயணம் செய்தது தெரியவந்தது.இவர்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள, ஏ.டி.எம்.,களில் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில், கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்த உள்ளோம். இவர்கள், பாரத் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான, ஏ.டி.எம்., மையங்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர்.