திருச்செங்கோடு : '' பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், கேமரா பொருத்தப்பட்டு இணையதளம் மூலம் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா கூறினார்.திருச்செங்கோடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிழக்கு முஞ்சனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னப்பாவடி நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் ஔவை கல்வி நிலையம் நடுநிலைப்பள்ளிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா, பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.பின் அவர் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளில், 687 ஓட்டுப்பதிவு மையங்களில், 1,628 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 53 ஓட்டுப்பதிவு மையங்களில், 174 ஓட்டுச்சாவடிகள் பதற்றமான ஓட்டுச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ராசிபுரம், 19, சேந்தமங்கலம், 29, நாமக்கல், 18, ப.வேலுார், 26, திருச்செங்கோடு, 33, குமாரபாளையம், 49 என, மொத்தம், 174 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன.இந்த பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், கேமரா பொருத்தப்பட்டு இணையதளம் மூலம் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மத்திய ராணுவ படை வீரர்கள், நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு கூறினார்.தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதையடுத்து, பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற மாவட்ட தேர்தல் அலுவலர் உமா, பூத் சிலிப் வழங்கினார்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தி, தாசில்தார் விஜய்காந்த், கமிஷனர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.