பட்டு நுால் உற்பத்தி உயர்வு; அமைச்சர் பெருமிதம்
ராசிபுரம், ''தமிழகத்தில் பட்டு நுால் உற்பத்தி உயர்ந்துள்ளது,'' என, சிறுதொழில்துறை அமைச்சர் அன்பரசன் பேசினார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கூனவேலம்பட்டி ஆணைக்கட்டிப்பாளையத்தில், எம்.பி., ராஜேஸ்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில், 2.20 கோடி ரூபாய் மதிப்பில் பட்டுக்கூடு அங்காடிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று அடிக்கல் நாட்டினார். கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., முன்னிலை வகித்தனர். பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் சாந்தி, எம்.எல்.ஏ.,க்கள், பொன்னுசாமி, ராமலிங்கம் கலந்து கொண்டனர்.விழாவில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: பட்டு உற்பத்தியை பெருக்க, எண்ணற்ற பல திட்டங்களை, தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ராசிபுரத்தில் பட்டுக்கூடு அங்காடி மூலம் நான்காண்டுகளில், 385 மெ.டன் பட்டுக்கூடு, 16.50 கோடி மதிப்பில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், மல்பெரி நடவு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் நவீன தளவாடங்கள் என, 2,230 விவசாயிகளுக்கு, 14.90 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 16,313 விவசாயிகளுக்கு, 183.16 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், 1,834 மெ.டன்னாக இருந்த பட்டு நுால் உற்பத்தி, 2,728 மெட்ரிக் டன்னாக தற்போது உயர்ந்துள்ளது. இவ்வாறு பேசினார்.முன்னதாக, 93.28 லட்சம் ரூபாய் மதிப்பில், 152 பட்டு விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்கள் மற்றும் தளவாட பொருட்கள், பட்டுப்புழு வளர்ப்பு மனை மானியம், மல்பெரி நடவு செய்து பட்டுப்புழு வளர்ப்புமனை அமைத்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் 75 முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.