உள்ளூர் செய்திகள்

இழுத்தடிப்பு

நாமக்கல் : நாமக்கல் யூனியனில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில், 2,800 ரூபாய் வீதம் தர ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு, தனி ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் யூனியனுக்கு உட்பட்ட பகுதியில், 55 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில், 325 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில், 2,800 ரூபாய் தர ஊதியம் பெறும் ஆசிரியர், உதவி ஆசிரியர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம், 750 ரூபாய் தனி ஊதியம் வழங்க வேண்டும் என, உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கபபட்டது. எட்டு மாதங்களானபோதும், அந்த ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. அதுகுறித்து காரணம் கேட்கும் ஆசிரியர்களிடம், 10 ஆண்டு நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் வழங்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் உள்ளது என்பது உள்ளிட்ட காரணம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், 2,800 ரூபாய் தர ஊதியம் பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்று, அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சம்மந்தப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலக ஊழியர்களிடம், ஆசிரியர்கள் தெரிவித்தபோதும், அதை ஏற்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து துவக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அடிப்டை ஊதியம் மற்றும் தர ஊதியம் வழங்கப்படுகிறது. அதில், தர ஊதியம், 2,800 ரூபாய் பெறும் ஆசிரியர்கள் அனைவருக்கும், தனி ஊதியம், 750 ரூபாய் வழங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு கடந்த ஜனவரி மாதம் பிறபிக்கப்பட்டது. எனினும், இதுவரை நாமக்கல் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவங்கப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற யூனியனில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திரவதனா தெரிவித்ததாவது: இது ஒரு சாதாரண விஷயம். மொத்தம், 12 ஆசிரியர்களுக்கு, 750 ரூபாய் வழங்க வேண்டும். அதற்குரிய பில் கருவூலத்துக்கு அனுப்பியபோது, 500 ரூபாய் தான் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின், 750 ரூபாய் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத ஊதியத்துடன், 750 ரூபாய் சேர்த்து வழங்கப்படும். இதுபற்றி ஆசிரியர்களிடம் விளக்கமாக கூறியும் புகார் செய்கின்றனர். மொத்தம், 325 ஆசியர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்பார்வையிட இரு ஊழியர்கள் மட்டுமே உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உள்ளனர். இரு ஊழியர்களைக் கொண்டு எத்தனை பணிகளை மேற்கொள்ள முடியும். தவிர, சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கும் பணியும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ