உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி முறை : வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை

கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி முறை : வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை

ராசிபுரம்: 'அதிக மகசூல் தரக்கூடிய திருந்திய நெல் சாகுபடி முறைகளை பயன்படுத்தி, கூடுதல் வருவாய் பெற்று பயன்பெறலாம்' என, எலச்சிபாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் லோகநாத பிரகாசம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழையின்மை, விவசாய கூலித் தொழிலாளர் பற்றாக்குறை, கூலி உயர்வு, வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிப்படைந்தனர். நெற்பயிரில் மாறுபட்ட நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை கையாண்டு, குறைந்த இடு பொருட்கள் செலவில், அதிக நெல் உற்பத்தி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலாம். அத்தகைய தொழில்நுட்பம்தான், திருந்திய நெல் சாகுபடி திட்டம். தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் அல்லது வீரிய ஒட்டு நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய, இரண்டு கிலோ விதை போதுமானது. ஒரு ஏக்கர் நடவு செய்ய, 40 சதுர மீட்டர் அல்லது ஒரு செண்ட் நாற்றங்கால் தேவை. அதன் மீது பாலிதீன் விரிப்புகளை பரப்பி, மரச்சட்டங்களை வைத்து மேட்டு பாத்திகள் அமைத்து, அதில் மண் மற்றும் தொழு உரம் நிரப்பி நெல் நாற்று விட வேண்டும். 10 முதல், 14 நாட்கள் வயதான நாற்றுகளை நடவு செய்ய உபயோகிக்க வேண்டும்.

நடவு வயலை, லேசர் சமன் செய்யும் கருவி கொண்டு, துல்லியமாக சமன் செய்ய வேண்டும். நெல் நடவு செய்ய இடைவெளியை சரியாக பராமரிக்க மார்க்கர் கருவியை பயன்படுத்த வேண்டும். 22.5க்கு 22.5 செ.மீ., இடைவெளியில் மார்க்கர் கருவியை உபயோகிப்பதன் மூலம், சதுர நடவாக நடவு செய்ய வேண்டும். குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்து, நீர் மறைய நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். ஒரு இன்ச் அல்லது, 2.5 செ.மீ.,க்கு அதிகமாக நீர் நிறுத்தக் கூடாது. கோனாவீடர் களையெடுக்கும் கருவியைக் கொண்டு களை எடுக்க வேண்டும். நடவு செய்த 10ம் நாள் முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை என, நான்குமுறை களைகளை அழுக்கி சேற்றை கலக்குதல் வேண்டும். அதனால், வேர்களின் வளர்ச்சி அதிகமாகி, அதிக அளவில் தூர்கள் வெடிக்கும். ஊட்டச்சத்துகளை உபயோகிக்கும் திறன் அதிகரிக்கும். மேலும், மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து வேரின் துரித வளர்ச்சிக்கு உதவுகிறது. இலை வண்ண அட்டையை பயன்படுத்தி, தேவையான தழைச் சத்தினை மேல் உரமாக இட வேண்டும்.அவ்வாறு தொழில் நுட்பங்களை கடைபிடித்தால், அதிக தூர்கள், கதிர்கள், மணிகள், குறைவான பதர்கள், திரட்சியான நெல் மணிகள் கிடைத்து அதிக மகசூல் பெறலாம். நெல் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள், அதிக மகசூல் தரக்கூடிய திருந்திய நெல் சாகுபடி முறைகளை பயன்படுத்தி, கூடுதல் வருவாய் பெற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ