ஆயுள் தண்டனை கைதி தலைமறைவு நாமகிரிப்பேட்டை போலீசார் தேடல்
நாமகிரிப்பேட்டை: பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி தலைமறைவானார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில், கடந்த, 2015ல் ஒரு பெண்ணை கணவன் கன்முன்னே, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறையில் இருந்த பாலியல் குற்றவாளி ஜெயசூர்யா, 30, தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் பரோலில் செல்ல நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். கடந்த, 7 முதல், 12 வரை ஜெயசூர்யாவுக்கு பரோல் வழங்கப்பட்டது. மேலும், 12 மாலை, 5:30 மணிக்கு சிறைத்துறை சூப்பிரடென்ட் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.ஆனால், 12ல் ஆயுள் தண்டனை கைதி ஜெயசூர்யா ஆஜராகவில்லை. இதையடுத்து, கோவை சிறை அலுவலர் சரவணகுமார், நேற்று நாமகிரிப்பேட்டை போலீசில் புகாரளித்தார். அதன்படி போலீசார், தலைமறைவான ஜெயசூர்யாவை வலைவீசி தேடி வருகின்றனர்.