உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏசி பழுதால் சென்னை-திருவனந்தபுரம் ரயிலை நிறுத்தி பயணியர் போராட்டம்

ஏசி பழுதால் சென்னை-திருவனந்தபுரம் ரயிலை நிறுத்தி பயணியர் போராட்டம்

சேலம்: சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில், 'ஏசி' பழுதானதால், ஜோலார்பேட்டை - சேலம் இடையே வந்தபோது, ரயிலை நிறுத்தி, தண்டவாளத்தில் நின்று பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் மதியம், 3:20 மணிக்கு புறப்பட்டது. அதில் முதல் வகுப்பு பெட்டியில் இருந்த, 'ஏசி' சரிவர இயங்காத நிலையில், ரயில் அரக்கோணத்தை கடந்தது. அப்பெட்டியில் இருந்த பயணியர், அசவுகரியத்துக்கு ஆளாகி, ஆன்லைன் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு புகார் அளித்தனர். அதற்குள் மாலை, 6:28 மணிக்கு, ரயில் ஜோலார்பேட்டையை அடைந்தது. மெக்கானிக்குகள் முயன்றும் பழுதை சரி செய்ய முடியாததால், 6:51க்கு ரயில் புறப்பட்டது.பாதிக்கப்பட்ட பயணியர், ஜோலார்பேட்டை - சேலம் இடையே வந்தபோது, அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, நடு வழியில் ரயிலை நிறுத்தினர். பின் இறங்கி, இணை தண்டவாளத்தில் நின்றபடி போராட்டம் நடத்தினர். டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, 'ஏசி பழுதாகிவிட்டது என, அனுப்பிய புகாருக்கு, பழுதை நீக்காமல் நீக்கியதாக, எப்படி குறுந்தகவல் அனுப்பலாம்' என கேட்டு, பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், ரயில் சேலம் சென்றதும், 'ஏசி பழுது நீக்கப்படும்' என கூறி சமாளித்து அனுப்பினர்.பின் அந்த ரயில், சேலத்துக்கு இரவு, 8:12 மணிக்கு வந்து சேர்ந்தது. மீண்டும் மெக்கானிக்குகள், பலமுறை முயன்றும், பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால் சேலம் கோட்ட இயக்கப்பிரிவு அதிகாரிகள், பயணியரிடம் சமாதானம் பேசினர். பின் அருகே உள்ள இரண்டடுக்கு 'ஏசி' பெட்டிக்கு, அந்த பயணியரை இடமாற்றி, இருக்கை ஒதுக்கீடு செய்து அமர வைத்தனர். இதையடுத்து ரயில் புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி